Wednesday, March 11, 2009

சூரிய நமஸ்காரம்

இயற்கைக்கு நன்றி கூறுவதே இறைவனுக்கு கூறும் நன்றியாகும். இயற்கையின் படைப்புகள் அனைத்துமே கடவுளின் அவதாரங்கள்தான். ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் வாழத்தான் இறைவனால் படைக்கப்பட்டது. அப்படி படைக்கப்பட்டதில் முதன்மையானது சூரியனே. இதனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுற்றுப்பாதையில் இயங்குகின்றன. இவற்றின் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது சூரியன்தான். பூமியின் செயல்பாட்டில் சூரியனே காரணமாகிறது.ஒவ்வொரு உயிரும் சூரியனை மையமாக வைத்தே வாழ்கின்றன. இதனால்தான் பழங்காலத்தில் சூரியனை முதற்கடவுளாகவும், கண்கண்ட கடவுளாகவும் வழிபட்டனர்.இந்த சூரிய சக்தியின் மூலம் தான் வாழ்வின் அதிசயங்கள் எல்லாம் நிகழ்கின்றன.அதுபோல் வாழ்வில் வெற்றி அடைய அனைவரும் விரும்புவார்கள். ஒரு மனிதன் வெற்றியடைய உடலை நலமோடும், மனதை வளமோடும் வைத்துக்கொள்ள வேண்டும். மனமும் உடலும் ஒருங்கிணைந்தால்தான் உடல் ஆரோக்கியமும் எடுத்த செயல்களில் வெற்றியும்கிட்டும்.உடலுக்கு அடிப்படையான யோகாசன முறையையும் மன வளத்திற்கு அடிப்படையான சுவாச முறையையும் இணைக்கும் வழிபாடே சூரியநமஸ்காரமாகும்.சூரியனின் ஈர்ப்பு விசை சீராக இருப்பதால்தான் பூமியின் சுழற்சி சீராக நடைபெறுகிறது. பூமியின் சுழற்சியைப் போலவே மனித வாழ்க்கையின் சுழற்சியும் சூரியனை மையமாக கொண்டு நடைபெறுகிறது. சூரியன் இல்லையென்றால் பூமி இல்லை. மற்ற எந்த உயிரினமுமே இருந்திருக்காது.ஆன்மீக பூமியான நமது பாரத தேசத்தில் சூரிய வழிபாடு பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ஞாயிறு போற்றுதும் என்று கூறி ஆரம்பிக்கிறார். இதிலிருந்து சூரிய பகவானையே முதல் கடவுளாக வணங்கி வந்துள்ளனர் என்பதை அறியலாம்.உழவுத் தொழிலான விவசாயம் சூரியபகவானின் அருளாலே வருடாவருடம் நல்ல விளைச்சலைக் கொடுக்கிறது. இதனால் அறுவடை தினம் ஆரம்பிக்கும் தைத்திருநாளன்று சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்.நமது கண்முன் தெரியும் கடவுள் சூரியனே என நமது இதிகாசங்கள் பறைசாற்றுகின்றன.இராமாயணத்தில் இராமர், மந்திர வித்தைகள் கற்றுத் தேர்ந்த இராவணனை போரில் வீழ்த்தி வெற்றி பெற அகத்திய மாமுனிவர் இராமருக்கு உபதேசித்த மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மகா மந்திரம். இந்த மந்திரம் சூரியனை வணங்கும் மந்திரமாகும் .சூரியனின் உதயம், பயணம், அஸ்தமனம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கோவில்களில் பூஜைகள், யாகங்கள் போன்ற ஆன்மீக விஷயங்களும், திருமணம் சடங்குகள் போன்ற வாழ்வியல் விஷயங்களும் நடை பெறுகின்றன.இதுபோல் மனித உடலில் சூரிய நமஸ்காரமானது சுவாசத்தை முறைப்படுத்தி, உடலின் வெளியே இயங்குகின்ற உறுப்புகளோடு, உடலின் உள்ளே இயங்கக்கூடிய உறுப்புகளையும் முறையாகச் செயல்படச் செய்து நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் பயிற்சியாகும். ஐந்து வயது குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் செய்யக்கூடிய யோகாசனமே சூரிய நமஸ்காரம் ஆகும்.மிகக் குறைந்த நேரம் செய்தால்கூட அதிகம் பயனைத் தரக்கூடிய யோகாசனமும் இதுதான். சூரியக் கதிர்களின் முழுப் பலன்களையும் மனிதன் பெற்று ஆரோக்கிய வாழ்வை கொடுப்பது சூரிய நமஸ்கார வழிபாடாகும்.தினமும் காலை சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்பவர்களுக்கு இதயம், நுரையீரல், நரம்புகள், தசைகள், தமனிகள், நாளமில்லாச் சுரப்பிகள், எலும்பு மூட்டுகள், மூளை உள்ளிட்ட எல்லா உறுப்புகளுக்கும் முழுமையான பயிற்சி கிடைப்பதால் உடலின் இரத்த ஓட்டம், சுவாசம், ஜீரணம் போன்றவை சீராக செயல்படும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.சூரிய நமஸ்காரப் பயிற்சியானது அன்றாடம் மனிதருக்கு புத்துணர்வை தருவது மட்டுமல்லாது ஆன்மீக பலம் உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, தெளிவான சிந்தனை கூடுதல் செயல்திறன், அபார நினைவாற்றல், சுய கட்டுப்பாடு இவற்றைக் கொடுப்பதுடன் இளமையான தோற்றத்தைத் தருகிறது.பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சூரிய சக்தியின் மூலமே தங்களின் தவப் பயனை அடைந்தார்கள். சூரிய சக்தியின்ஒளியை உச்சந்தலை சுவாசம் வழியாக உள்வாங்கி திலர்த காலத்தில் நிறுத்தி பிரபஞ்ச சக்தியை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment